திருச்சி

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸை கொலை செய்ய முயன்றதா அப்பாவி ஒருவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

ops

அ.தி.மு.க. மூன்று அணிகளாக உடைந்து ஒவ்வொரு அணயினரும் பிறரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் மூன்று அணியை சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜி சந்தித்தனர். மூவரும் பத்து நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து அவர்கள் திருச்சி சென்றனர். பிறகு திருச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேச வந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த நபரை அதிமுகவினர் அடித்து, திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, “குறிப்பிட்ட அந்த நபர் பெயர் சோலைராஜா. அவர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்தான். மதுப்பழக்கம் உள்ள அந்த நேரத்தில் சற்று நிதானமின்றி இருந்தார். பிறர் தவறாகப் புரிந்துகொண்டு அவரைத் தாக்கி, காவல்துறை வசம் ஒப்படைத்துவிட்டனர்” என்று ஒரு தகவல் பரவியது.

இதை உறுதிப்படுத்துவது போல சோலைராஜாவின் மனைவி, ராஜேஸ்வரி, “எனது கணவர் ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளர். எங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. நாங்கள் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மகளின் திருமணத்துக்கு ஓ.பி.எஸ்ஸிடம் உதவி கேட்கவே என் கணவர் சென்றார்” என்று ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, “அப்பாவி ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டிவிட்டார்கள்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, “முதல்வர் பதவியைவிட்டு விலகிய போது ஓ.பி.எஸ்ஸுக்கு இருந்த ஆதரவு மனநிலை மக்களிடையே பெருமளவு குறைந்துவிட்டது. அ.தி.மு.க. அணிகளை இணைத்து தலைவர் ஆவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.

தவிர சமீபத்தில் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் ராட்சத கிணறு வைத்து நீரை எடுத்தது பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து கிணற்றை பொது மக்களுக்கு இலவசமாக தருவதாகக் கூறிவிட்டு, யாருக்கும் தெரியாமல் வேறு ஒருவருக்கு ஓபிஎஸ் விற்றது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது.

பிறகு ஊர் மக்களுக்கே அந்த கிணறு அளிக்கப்பட்டாலும் ஓ.பி.எஸ். செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. இதனால் திட்டமிட்டு கொலை முயற்சி நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள்” என்று எதிர் அணியினர் கூறிவருகிறார்கள்.