மும்பை

பி எம் சி வங்கியின் 8 சீக்கிய அதிகாரிகளைச் சீக்கிய சமுதாயம் குருத்வாரா மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

பி எம் சி வங்கி என வழங்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் வாராக்கடன்கள் அதிகமானதால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இதில் முதலீடு செய்துள்ளவர்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.   பலருக்கும் தங்கள் முதலீடு செய்துள்ள பணம் திரும்பக் கிடைக்குமா என்பதில் மிகவும் ஐயத்துடன் உள்ளனர்.

இந்த வங்கியின் முதன்மை அதிகாரிகளாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர்.   அவர்கள் அனைவரும் குருத்வாரா மற்றும் சீக்கிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பொறுப்பு வகித்து வருகின்றனர்.   தற்போது வங்கியின் இயக்கம் திடீரென முடங்கியதால் சீக்கிய சமுதாயத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த வங்கியின் இயக்குநர்கள் தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக அவர்கள் கருதி  உள்ளனர்.

சீக்கிய சமுதாயம் இணைந்து மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளில்28 பள்ளிகள், நான்கு கல்லூரிகள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.  அவர்கள் இந்த 8 இயக்குநர்களையும் குருத்வாராக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனை ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளனர்.   இவர்களுடன் இந்த இடங்களில் பொறுப்பு வகிக்கும் குடும்பத்தினரையும் நீக்கி உள்ளனர்.

இதில் வங்கியின் தலைவர் வாரியம் சிங், துணைத் தலைவர் பல்பீர் சிங் கோச்சார். இயக்குநர்கள் சுர்ஜித் சிங் நவ்ரங், தலித் சிங் பால், சுர்ஜித் சிங் அரோரா, ரஞ்சித் சிங், கௌதம் சிங் கோதி, மற்றும் ஜஸ்விந்தர் சிங் பன்வயிட் ஆகியோர் ஆவார்கள்.    விரைவில் நடைபெற உள்ள குருநானக் 550 ஆம் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளவும் இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.