பெங்களூரு

சாம், டில்லி, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியோரை கண்டறியத் தேசிய குடியுரிமைப் பட்டியல் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.   ஆனால் இந்த பட்டியலின் வரைவில் ஏராளமான உள்ளூர் மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் பெயர்கள் விடுபட்டது அதிர்ச்சியை உண்டாக்கியது.    கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அசாம் மாநில தேசிய குடியுரிமை பட்டியலின் இறுதி வடிவத்தை வெளியிட்டது.

இந்த இறுதிப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.   பல இஸ்லாமியர்கள் தங்களை இந்தியாவை விட்டு விரட்ட இவ்வாறு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்கள்.   டில்லி மற்றும் மேற்கு வங்க பாஜகவினரும் இது போல் தங்கள் மாநிலத்திலும் தேசிய குடியுரிமைப் பட்டியல் அமைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.   இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது இந்த வரிசையில் கர்நாடகாவும் சேர்ந்துள்ளது.   இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, “நாடெங்கும் தற்போது தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்த பேச்சு நிலவி வருகிறது.  கர்நாடகாவில் பல நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர்.  எனவே இவர்கள் குறித்த விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்.  அதன் பிறகு நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விவாதித்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். “ எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் பாஜக அரசு தேசிய குடியுரிமைப் பட்டியலில் செலுத்தும் கவனத்தை மாநிலத்தில் வெள்ளத்தால் அவதிப்படும் மக்களின் துயர் துடைப்புப் பணியில் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.   மஜத  செய்தி தொடர்பாளர் தன்வீர அகமது பாஜக அரசு மாநில முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் வாய்ச்சொல் அறிக்கை மட்டும் அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.