குமரி: குமரி முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி 3 நாள் தியானத்துக்காக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். குமரிமாவட்டம், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை (மே 30ந்தேதி) முதல் ஜுன் 1ந்தேதி வரை தியானம் மேற்கொள்கிறார். அவர் 45மணி நேரம் தியானம்  மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நேற்று மாலை குமரிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மனை தரிசித்ததுடன், தனி படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானத்தை மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில்,  அவர் தியானம் செய்யும் படங்கள், வீடியோக்கள் முதன் முறையாக  வெளியிடப்பட்டுள்ளன.  பிரதமர் மோடி. விவேகானந்தர் சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நெற்றியில் விபூதி பட்டை – குங்குமம் அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி கைகூப்பி வணங்கியவாறு பிரதமர் மோடி சம்மனம் இட்டு அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்று இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார்.  தியானத்திற்கு இடையே, இளநீர், பழச்சாறு அருந்தி வருகிறார். நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

Photo and Videos: Thanks: ANI