கொல்கத்தா:
பிரதமர் நரேந்திர மோடியால் ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாது. தன் எதிரே வைக்கப்பட்டுள்ள மெல்லிய காட்சித் திரையைப் பார்த்தே பேசுகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
வங்காளி புதிய இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
10 கோடி ஏழை மற்றும் கீழ்தட்டு குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஆயுஸ் பாரத் என்ற மருத்துவத் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கினார்.
இதை வைத்துக் கொண்டு அசிங்கமான அரசியலை மத்திய அரசு நிகழ்த்துகிறது.இந்த திட்டம் குறித்து மேற்கு வங்க மக்களுக்கு தாமரை சின்னத்துடன் தன் படத்தை போட்டு மோடி கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஏதோ இந்த திட்டத்தை தான் மட்டுமே செயல்படுத்துவதாக கீழ்த்தரமான விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த திட்டத்துக்கான 40 சதவீத தொகையை மாநில அரசு தருகிறது. தானே இந்த திட்டத்தை செய்வதாக தம்பட்டம் அடிக்கும் மத்திய அரசு முழுச் செலவையும் ஏற்கத் தயாரா?
பிரதமர் மோடியால் ஆங்கிலத்தில் சரியாகப் பேச முடியாது.
தன் முன்னே மெல்லிய காட்சித் திரையை(டெலி ப்ராம்ப்டர்) வைத்துக் கொண்டு அதில் ஓடும் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறார். இது பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.