சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை,  மதிமுக எம்.பி. வைகோ இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம் குஜராத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

100 வயதாகும்பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை அவர் சி உயிரிழ்ந்தார்.  அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்:

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகமதாபாத் செல்கிறார். 12 மணி விமானத்தில் செல்லும் முதல்-அமைச்சருடன், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா முதல்வர் தமிழிசை:

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மழலையாய் பிறந்த மகனை…

பிறர் மலைப்புற வளர்த்து…

உறுதியான மலை என பொது வாழ்க்கையில் உயரச் செய்து…

உலகிலேயே உயர்ந்த மனிதராய் உயர்த்தி தன் தள்ளாத வயதிலும்…

தளர்வில்லா வலிமையை…

உலகின் வலிய தலைவராம்…

நம் பிரதமருக்கு…

தற்போது மட்டுமல்ல பிறந்ததிலிருந்து…

அளித்துவந்த அன்னை தீபம் அணைந்து விட்டது

எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம் எதையும் தாங்கும் எப்போதும் உள்ள உறுதியை இப்போதும் நம் இறைவன் நம் பிரதமருக்கு அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அன்புத் தாயார் ஹீராபென் அம்மையார் அவர்கள் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார்.

இந்த துக்கச் செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் கூடிய மனவலிமையையும் உறுதியையும் இயற்கை உங்களுக்கு வழங்கட்டும்.

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.