டில்லி

நாட்டில் 73 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இன்று நாடு முழுவதும் 73 வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 21 குண்டு முழக்கங்களின் இடையே பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் உள்படப் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் மோடி உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துக்கள். தற்போது ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது.  அம்மாநிலத்தில் சுமுக நிலையைக் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. ஒவ்வொரு அடியாக நாட்டு மக்களின் ஆதரவுடன் நாங்கள் எடுத்து வைத்தோம். எங்கள் மீது நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மக்கள் அளித்து வரும் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும். நாங்கள் மீண்டும் 2019ல் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையைத் தந்துள்ளது. மத்திய அரசு தான் பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியப் பெண்களின் உரிமையை  மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தைக் காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்குச் சேவையாற்றப் பல புதிய திட்டங்களை செய்யத் தொடங்கிவிட்டோம்

மத்திய அரசு ஊழல் என்னும் கொடிய நோயை அகற்றப் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. நடந்து முடிந்த 5 ஆண்டுகளில் வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, இந்த அரசுக்குச் சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நமது முக்கிய நமது படைகள் தான். இந்தியாவின் முப்படைகளையும் மேலும்  கூர்மையாக்க, இந்த செங்கோட்டையில் நான் மிக முக்கிய முடிவை அறிவிக்கிறேன். இனி இந்தியாவுக்கு முப்படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff – CDS) தான் இருப்பார். இந்த முறை நமது படைகளை மேலும் வலிமையாக்கும்.

நாம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து இந்தியாவை விடுவிப்போமா? அதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம்  வந்துவிட்டது. இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதனால், உள்ளூர் உற்பத்தியையும், கிராமப்புற பொருளாதாரங்களையும் முன்னேற்ற முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.