புதுடெல்லி:

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தான் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த மெகா ஊழல் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு, வர்த்தகர்களுக்கு,ஒவ்வொரு ஜனநாயக அமைப்புக்கும் அதிர்ச்சியாகவும், பேரழிவாகவும் இருந்தது.

பாஜகவுக்கு ஆதரவான அலை இருப்பதாக கூறுவது தவறு. பாஜகவுக்கு எதிரான மன நிலையிலேயே மக்கள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மெகா ஊழல்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை கடும் நெருக்கடியில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் உண்மை ஆகிவிடாது.  இந்தியாவில் அதிபர் முறை தேர்தல் சாத்தியமல்ல. 130 கோடி மக்களுக்கும் தனி மனிதர் ஒருவர் பிரதிநிதியாக இருந்து செயல்பட முடியாது என்றார்.