சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் 2022 தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில்  கலந்துகொள்ள பிரதமர் மோடி வரும் 28ந்தேதி சென்னை வருகிறார்.

44-வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி, இந்திய வரலாற்றில் முதன்முதலாக, தமிழ்நாட்டின் சிற்ப நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இதற்காக  பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், வரும்  28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக  இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ந்தேதி, சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு, போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார். அவருடன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், விளையாட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.