டில்லி

இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில் இதுவரை 1,11,12,056 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இதில் 1,57,195 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,07,84,568 பேர் குணம் அடைந்து தற்போது 1,70,293 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஜனவரி 16 முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளது.  இதில் முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா முன்கள ஊழியர்கள் உள்ளிட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்று முதல் 2 ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளது..

இந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமின்றி 45 வயதுக்கு மேற்பட்டோரில் குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது.  இன்று பிரதமர் மோடி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில்,

இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் நான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.  

கொரோனாவை எதிர்த்து உலகே போரிடும் நிலையில் அதை வலுப்படுத்த விரைவான பணியில் ஈடுபட்டுள்ள நமது மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சேவை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஊசி போட்டுக்கொள்ளத் தகுதியானவர் அனைவரும் போட்டுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.  நாம் அனைவரும் இணைந்து கொரோனா அற்ற இந்தியாவை உருவாக்குவோம்

எனப் பதிந்துள்ளார்.