திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.  பிரதமர் மோடி  140 கோடி இந்தியர்கள் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  பிரதமரின்  நான்காவது திருப்பதி விஜயம் என்று கூறப்படுகிறது.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 30ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி நேற்று மாலை தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு உள்ளார்.  நவம்பர் 25, 26, 27 (இன்று) ஆகிய தேதிகளில் தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சார திட்டம் வகுப்பப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  நேற்று இரவு திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேற்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த நிலையில், இன்று காலை ஏழுமலையானை தரிசித்தார்.

இன்று காலை 7:55 மணிக்கு  பிரதமரின் வாகனம், கோவிலை அடைந்து மகாத்வார் வழியாக நுழைந்து, காலை 8.05 மணிக்கு சுவாமி தரிசனம் செய்த பிரதமர், 8.45 மணி வரை கோயிலில் தங்கினார். தரிசனம் முடிந்ததும் வேத பண்டிதர்களின் ஆசி மற்றும் பிரசாதம் பெற்று, அதன் பிறகு 8:55க்கு வெளியேறினார். அங்கிருந்து நேரடியாக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பின்னர் காலை 9:30 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு திருப்பதி விமான நிலையம் வந்து சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பதியில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிக்கள் நடத்தப்பட்டது. அவர்  தங்கியிருந்த விருந்தினர் மாளிகைகளை சுற்றி ஏற்கனவே என்எஸ்ஜி படைகள் பாதுகாப்பு போடப்பட்டதுடன், அந்த பகுதியை  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும்,  பிரதமர் வருகையை முன்னிட்டு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே ஏழுமலையான் கோவிலில் பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்புக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தது இதுவே முதல்முறை என்றும் இதுவரை 4 முறை அவர் திருப்பதி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.