திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில்,  நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் குடும்ப சகிதமாக  கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்.

இந்த ஆண்டு கார்த்திகை பெளர்ணமி நவம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. கார்த்திகை பெளர்ணமி அன்று புண்ணிய நதிகளில் நீராடி, தானம் செய்வதால் தீராத புண்ணியத்தைப் பெறுவர் என்பது நம்பிக்கை. இந்த நாளில், லட்சுமி தேவி, செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வம், விஷ்ணு மற்றும் சந்திரன் வழிபடப்படுகிறது.

தமிழ் மாத கணக்கீட்டின் படி சூரிய பகவான் “விருச்சிகம்” ராசியில் சஞ்சரிக்கின்ற மாதம் கார்த்திகை மாதம் எனப்படும். விருச்சிகம் என்பது ஜோதிட சாஸ்திரத் தின் படி நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய ராசியாகும். போர்க்கிரகமான செவ்வாய் பகவானின் தன்மையை கொண்டவர் தமிழ்கடவுளாகிய “முருகப்பெருமான்” ஆவார். எனவே முருகப்பெருமானை வழிபடுவதற்குரிய ஒரு மாதமாக இருக்கிறது.

அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திர தினங்களில் “கார்த்திகேயன்” ஆன முருகனை வழிபடுபவர்களுக்கு நோய் நொடிகள், துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கி, எதிரிகள் தொல்லை ஒழிந்து, தொழில் மற்றும் வியாபாரங்களில் இன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண தடை தாமதங்கள் போன்றவை விலகும்.

திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும். பக்தர்கள் மலை வலம் வரும் நாளில், நீராடி, தூய்மையான ஆடையை அணிந்து கொண்டு, திருநீறு அணிந்து, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், இறை சிந்தனையோடு மட்டுமே செல்லவேண்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும் . இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

அதேவேளையில்,    கார்த்திகை தீப திருவிழா முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, 2-ம் நாள் (நாளை) கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத்தானே குடும்பத்துடன் சுற்றி  அண்ணாமலையார் கிரிவலம் வருவார். அதன்படி நாளை அண்ணாமலையார் கிரிவலம்  நடைபெற உள்ளது. அன்றைய தினம்,  உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.அ மேலும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும். நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாாகள். மேலும் கிரிவல பாதை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல தைமாதமும் அண்ணாமலையார் கிரிவலம் வருவார். தை மாதம் மாட்டு பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் திருவூடலின்போது, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று விடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.