ஜெய்ப்பூர்: ராகுலின் யாத்திரையை பார்த்து பாஜகவும் மோடியும் பயப்படுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். கொரோனா நெறிமுறை குறித்து ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா கடிதம் எழுதிய நிலையில், அதற்கு கெலாட் பதில் அளித்து உள்ளார்.

சீனா உள்பட வெளிநாடுநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும், மாநாட்டில் பல்லாயிரக்கனான தொண்டர்கள், கலந்து கொள்கிறார்கள் அவர்கள் நலன் கருதி முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும், ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் அதற்கு பின்னர் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லையென்றால் மக்கள் நலன் கருதி தற்போது ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பெற்று வரும் ஆதரவால், பாஜகவும், மோடி அரசும் அச்சம் அடைந்துள்ளனர் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், ராஜஸ்தானில் நடைபெற்ற ராகுலிடன் நடைப்பயணம் இன்று காலையுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், பாஜகவும் மத்திய அரசும் அதிகமான மக்கள் கூடுவதால் அச்சம் அடைந்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் ஒற்றுமை நடைப்பயணத்துக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு காரணமாகவே, அதற்கு குந்தகம் விளைவிப்பதற்காக பாஜக இவ்வாறு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த யாத்திரையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர்கள் இப்படி கடிதம் எழுதுவதால் மத்திய அரசு மிகவும் பயந்து விட்டது என்பது தெரிகிறது.  எங்கள் யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது, மேலும் தொடரும் என்றவர்,  நாட்டில் பாரத் ஜோடோ யாத்ராவின் தாக்கம் உள்ளது.

யூனியன் ஹெல்த் மினி மன்சுக் மாண்டவியாவின் கடிதத்தைப் பார்த்தேன், அவர்கள் பயப்படுகிறார்கள், அவர்களின் நிலையைப் பார்க்க முடியும். பாஜகவே மிகவும் கலக்கத்தில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜேபி நட்டாவின் ஆக்ரோஷ் பேரணி மாநிலத்தில் கடுமையாக தோல்வியடைந்தது என்று கூறியதுடன்,  கடந்த 2 நாள்களுக்கு முன்பு, திரிபுராவில் பிரதமர் மோடி நடத்திய பேரணியில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லையே. இரண்டாவது அலையின்போது கூட மேற்கு வங்கத்தில் மோடி மிகப்பெரிய பேரணிகளை நடத்தினாரே? ஒரு வேளை நாட்டின் மீதுதான் உண்மையான அக்கறை இருக்குமானால் சுகாதாரத் துறை அமைச்சர் பிரதமருக்கு அல்லவா முதல் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.