சென்னை: மாணாக்கர்கள் தொழிற்கல்விகளை தெரிந்துகொள்ளும் வகையில், அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பில்  தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் அறிமுக்கப்பட்டி ருந்தது. தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, அந்த பிரிவுகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 24,310 தொடக்கப்பள்ளிகளும், 7,024 நடுநிலைப்பள்ளிகளும், 3,135 உயர்நிலைப்பள்ளிகளும், 3,110 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இன்றளவும் நீடித்து வருகிறது. அதுபோல வயதான தகுதியற்ற ஆசிரியர்களும் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். அவர்களால் மாணாக்கர்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. அவர்களை பணியில் இருந்து ஓய்வு பெற வைப்பதற்கு பதிலாக தமிழகஅரசு ஓய்வு பெறும் வயதை அதிகரித்து உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணாக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 11-ம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும், மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றம் செய்யவும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொழில் பிரிவுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, பணியாற்றி வரும் ஆசிரியர் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலே மாணவர் சேர்க்கை உள்ள தொழிற் பாடப் பிரிவுகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.