சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்1, பிளஸ்2  பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு மார்ச் 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. ஹால்டிக்கெட்  இணையத்தில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று துவங்கியுள்ளது. வரும், 9ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.

மேலும் மார்ச் 13- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடக்கும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் 3169 தேர்வு மையங்களில் 7600 பள்ளிகளைச் சேர்ந்த 8.80 லட்சம் பள்ளி மாணவர்களும், மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடக்க இருக்கின்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வினை தமிழ்நாட்டில் 8.50 லட்சம் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 17.30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெடுகளை மார்ச் 3-ஆம் தேதி முதல் http://www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தனித்ததேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் டவுன் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், மற்ற மாணாக்கர்கள் 3ந்தேதி முதல் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,  இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி அன்று பிற்பகல் முதல் http://www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று “online-portal” என்ற வாசகத்தினை “Click” செய்து “HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR EXAM MARCH/APRIL 2023″ என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை (Hall Tickets) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும் எனவும், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.