சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்! பாரதிராஜா ஆவேசம்!

Must read

சென்னை,

லைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று  பாரதிராஜா ஆவேசமாக கூறினார்.

தமிழகத்தின் பாரம்பரியமான  ஜல்லிக்கட்டு விளையாட்டு,  திமிலா, தோளா? என்ற போட்டியே தவிர, மிருகவதையே இல்லை என்றும் பிரபல இயக்குனர் பாரதிராஜா காட்டமாக கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகமே திரண்டு உள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது,

4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள்.  ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் மரித்துப் போனதாய்தான் செய்தி இருக்கிறது.

ஜல்லிக்கட்டு மிருகவதையென்றால் தினசரி ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு அடிமாடுகளாய் போகிறதே அதை உங்களால் தடுக்க முடியுமா?

கோயில்களில்  கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்து விட முடியுமா?

பறவைகளையும் விலங்குகளையும் சிறைப்பிடித்து அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருகக்காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரி னங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா?

குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?

தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா?

காவல்துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாயக்ளை விடுவிக்க முடியுமா?

இது இப்படியிருக்க, இதை மிருக வதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா?

இந்தியா முழுவதும் சைவ உணவுதான் – அசைவத்திற்கு தடை விதியுங்கள்.

இந்தியாவில் தடை செய்ய முடியாத எத்தனையோ மோசமான விஷயங்கள் நடந்து கொண்டு உள்ளன. அவற்றை மத்திய அரசு தடை செய்யட்டும். அதன் பிறகு ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள்.

இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள்.

இது ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தோளா? என்ற போட்டியே தவிர, மிருக வதைக்கான இடமே இல்லை. மனிதன், மடிந்திருக்கிறானே தவிர மாடுகள் இறந்ததாக தகவல் இல்லை. மனித வதையென்று மனு செய்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிருக வதை என்பது இரண்டாம் கருத்து.

ஜல்லிக்கட்டுக்கு தடையென்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினை போட காளை கள் இல்லாமல், நம் பசு மாடுகளுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதிலி ருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது.

நம் கண்முன்னே பண்பாட்டு, பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாமென்று மாடுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தை கழட்டி விடுங்கள்.

எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கனாங்கயிற்றை அவிழ்த்து விடுங்கள். எங்கள் வாடி வாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொன்மையான பாரம்பரி யம் அழியாதிருக்கட்டும்.

ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டு கலாச்சாரத்தின் அடி மடியி லேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதற்கு மாநில அரசு கைகட்டி நிற்பதும், தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும்.

உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறைகேடுகளாலும் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள்.

அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை.

இதனை இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article