கோவை:
கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயில வரும் பெண்களை மூளைச்சலவை செய்து சந்நியாசம் பூண வைப்பதாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.
தற்போது அதே போன்ற இன்னொரு புகாரை, ஒரு பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் தண்டபானி, வசந்தா தம்பதி. இவர்களது இளைய மகள் அபர்ணா ( வயது 32) இளங்கலை பொறியியல் பட்டம் முடித்து விட்டு, ஐபிஎம் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெங்களுரு கிளையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தங்களது மகள் அபர்ணாவை கோவை ஈஷா யோகா மையத்தினர் மூளைச்சலவை செய்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அம்மையம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அபர்ணாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அபர்ணாவின் தாயார் வசந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“பெங்களுருவில் ஐபிஎம் நிறுவனத்தில் அபர்ணா பணியாற்றி வந்தாள். அப்போது அவளுக்கு ஈஷா யோகா மையத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பெங்களூருவில் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததார். திருமணம் செய்து கொள்ளச்சொன்னபோது, மறுப்பு தெரிவித்து வந்தாள் அபர்ணா.
ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலமாக திருமணம் செய்து கொண்டு ஆசிரமத்தில் தங்கிவிடுமாறு ஈஷா மையத்தினர் கூறியதாகவும் அதன்படி தான் செய்யப்போவதாகவும் அபர்ணா தெரிவித்தாள். இப்போது அவள் ஈஷா மையத்தினரின் பிடியில் இருக்கிறாள். அவளை மீட்டுத்தரவேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈஷா திருமண மையத்திற்கு புகார் மனு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும், அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தங்கள் பிள்ளைகளை.. குறிப்பாக பெண் பிள்ளைகளை, ஈஷா மையத்தினர் மூளைச்சலவை செய்து தங்கள் பிடியில் வைத்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருவது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel