சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு குறைந்த பட்சம் 18வது தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைச்செயலாளர் பார்த்தசாதி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, குறைந்த பட்சம் 40 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி. தொகுதி கேட்கப்பட்டது. ஆனால், அதிமுகவோ 10 தொகுதிகள் தரலாம் என்று கூறியது. இதனால்,  தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையில்,  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில்  எல்.கே.சுதிஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைச்செயலாளர் பாரத்தசாரதி, இறுதியாக அதிமுக 15 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக கூறியுள்ளது, ஆனால்,  நாங்கள் 18 தொகுதிகளாவது கண்டிப்பாக வேண்டும் என கூறியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் வேண்டும், இல்லையேல் 3வது அணி அமைப்போம்  என மிரட்டி வந்த பிரேமலதா மற்றும் எல்கே.சுதீஷ் போன்றோர், தற்போது, 18 தொகுதிகளாவது கொடுங்கப்பா என அதிமுகவிடம் சரணாகதி அடைந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் சசிகலா களமிறங்குவார் என்ற எண்ணத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடி வந்த பிரேமலதா, தற்போது சசிகலா அரசியல் துறவறம் பூண்டுவிட்டதால், வேறு வழியின்றி அதிமுகவிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.