சென்னை:

தன்னை கருணை கொலை செய்துவிட்டு தனது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுமாறு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான ராபர்ட் பயஸ்,  தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அது  ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலம் சிறைவாசத்தில் இருப்பதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

 

இந்நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.  மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று அப்போதய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனாலும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு விரும்பவில்லை.  இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

 

இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன்.  தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எங்கள் விடுதலையை எதிர் நோக்கினர்.
ஆனால் மத்தியில் முன்பிருந்த அரசும், தற்போதைய அரசும் எங்கள் விடுதலையை கடுமையாக எதிர்க்கின்றன. சிறைக்குள்ளேயே தங்கள் வாழ்வை முடித்துவிட வேண்டும் என்பது மத்திய அரசு  முடிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக சிறையில் இருப்பது எனக்கு மட்டும் தண்டனை அல்ல.. என் குடும்பத்துக்கும் தண்டனையாக அமைந்துவிட்டது. ஆகவே என்னை கருணை கொலை செய்து என் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

சிறையில் இருந்தபடியே ராப‌ர்‌ட் பய‌ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்து முடித்தார். மேலும், இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கணினி பயிற்சியும் நிறைவு செய்தார். அதோடு, தந்தை பெரியார் பாலிடெக்னிக் மையத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, ஓவியம் உள்ளிட்ட பயிற்சிகளை படித்துள்ளார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இவர் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.