மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை ஆகியோரும் விலகியுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தனது குடும்பத்தினர் கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சத்தில் இருப்பதால், தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா நிலவரத்தைப் பார்த்து பல வீரர்கள் விலகியுள்ள நிலையில் இன்னும் ஒரு சுற்றுப் போட்டிகள், ப்ளே ஆஃப், எலிமினேட்டர் சுற்று, இறுதிப்போட்டி எஞ்சியுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரூ டை ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து தன்னுடைய நாட்டுக்குப் புறப்பட்டார். கொரோனா வைரஸ் அச்சத்தால் தங்கள் நாட்டில் லாக்டவுன் போடப்பட்டு விடலாம் என்ற அச்சத்தால், ஆன்ட்ரூ டை விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.