திருவனந்தபுரம்: உலகிலேயே, தடுப்பு மருந்து விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, உற்பத்தியாளர்களின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு மோடி அரசின் செயலை எதிர்த்து, கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளாவின் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிபி பிரமோத், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். அவர், இந்த சட்டமன்ற தேர்தலில், பாலக்காடு தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டவர். மேலும், 18 – 45 வயதுவரையிலான நபர்களை, இலவச தடுப்பு மருந்து திட்டத்திலிருந்து, மத்திய அரசு விலக்கியுள்ளதையும் தன் மனுவில் கேள்வியெழுப்பியுள்ளார் அவர். இதை சட்டவிரோதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு, வழக்கறிஞர்கள் அதுல் ஷஜி மற்றும் அன்வின் ஆன்டனி மூலமாக தாக்கல் செய்யப்பட்டது.

தடுப்பு மருந்துகளை, மத்திய அரசே, தனது பொறுப்பில் மொத்தமாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு விநியோகிக்கும் கடமையிலிருந்து விலகியதை தனது மனுவில் கடுமையாக எதிர்த்துள்ளார் சிபி பிரமோத். மாநிலங்களை, சந்தையில் மருந்துக்காக போட்டியிட வைத்தது சட்டவிரோதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.