மும்பை: கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும்; ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பாதியிலேயே வெளியேறுவதால், தொடர் பாதிக்கப்படுமா? என்ற ஐயம் எழுந்தது.

ஆனால், இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் தொடர் வழக்கும்போல் நடக்கும். எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சம் காரணமாக வெளியேற விரும்பும் வீரர்கள் தாரளமாக வெளியேறலாம். அதற்கு தடையில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். விதிகளைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பயோ-பபுள் சூழலை விட்டு வெளியேறக் கூடாது எனத் தெரிவித்துள்ளோம்.

ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி, இந்தியாவில் உள்ள கள நிலவரம் குறித்தும் தொடர்ந்து கேட்டறிவோம். இந்தக் கடினமான நேரத்தில் இந்திய மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.