மும்பை: மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில், ஐபிஎல் தொடரை எப்படி அரசு நடத்துகிறது? என்று தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஆண்ட்ரூ டை கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய விலகல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை கூறும்போது, “வீரர்களின் பாதுகாப்பு குறித்த பார்வையில் தற்போது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் இனியும் பாதுகாப்பாக இருப்போமா? என்பதுதான் கேள்வி.
இதுவே, இந்தியப் பார்வையில் எடுத்துக்கொண்டால் மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலை இருக்கும்போது, இந்தத் தொடருக்கு ஐபிஎல் அமைப்பும், அரசும் எப்படிச் செலவு செய்கிறார்கள்?
அதிக அழுத்தம் உள்ள இந்தக் காலகட்டத்தில் விளையாட்டுகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்ற பார்வையில் இது சரிதான். இருட்டின் முடிவில் வெளிச்சம் இருக்கும். இதன் அடிப்படையில் ஐபிஎல் போட்டிகளைத் தொடரலாம். நான் அனைவரது கருத்துகளையும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.