பிளாஸ்டிக் அரிசி: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை! அரசு எச்சரிக்கை

சென்னை,

டமாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் உள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்திகள் பரவி வருகிறது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பிளாஸ்டிக் அரிசி குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கடந்த வாரம் ஆந்திராவில் பிளாஸ்டிக் அரிசியில் தயாரான பிரியாணி விற்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுவதாக பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப்களில்  பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் காட்சிகள், அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பரவி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி கிடையாது என்றும், தமிழ்நாட்டில் எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆணித்தரமாக கூறினார்.

மேலும் இதுகுறித்து பல இடங்களில் அதிகாரிகள் அரிசை கடைகளுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று அயனாவரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசியை சமைத்து உணவு பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. ஊழியர்களில் சிலர் இந்த புகாரை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பணிமனைக்கு சென்று அரிசி உணவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். கிண்டி ஆய்வுக் கூடத்துக்கும் அந்த உணவு அனுப்பப்பட்டது.

சோதனையில் அது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதியானது.

இதன் காரணமாக “தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி எங்கும் இல்லை என்றும், அது பற்றி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒருசிலர் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் அரிசி தயாரிப்பு படங்களை பகிர்ந்து பரப்பி வருகிறார்கள். அப்படி வதந்தி பரப்புவது மாபெரும் குற்றமாகும். அவர்கள் யார் என கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


English Summary
Plastic rice: action rumored on social networks! Tamilnadu Government Warning