சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. பொருத்தமான தொற்றார் கண்டறியப்பட்ட பிறகு சிகிச்சை தொடங்கும் என சுகாதாரத் துறை கூறி இருக்கிறது.
இதுவரை 6 கொடையாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் முதல் நபரிடம் இருந்து பிளாஸ்மா தானம் இப்போது பெறப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவரின் ரத்தத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்திருக்கும்.
ஆகையால் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர் குறிப்பிட்ட நாட்களுக்கு (அதாவது 28 நாட்கள் ) பிறகு எந்த பாதிப்பும் இன்றி நல்ல உடல் நலத்தோடு இருந்தால் ரத்த தானம் அளிக்கலாம்.
அந்த ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளாஸ்மாவின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது  மருத்துவ வல்லுநர்களின் கூற்றாகும். பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டவுடன் அந்த ரத்தமானது மீண்டும் பிளாஸ்மா தானம் அளித்தவரின் உடலுக்கே திருப்பி செலுத்தப்படும்.
பிளாஸ்மா சிகிச்சைக்கு தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இரு மருத்துவமனைகளுக்கு மட்டும் தான் அனுமதி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.