சென்னை: இந்த 2020ம் ஆண்டில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது 59 என்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், புதிய வேலைவாய்ப்புகள் குறையும் என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, அரசுப் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்பன போன்ற தகவல்கள் பரவின.
ஆனால், இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது; இந்த 2020ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். டிஎன்பிஎஸ்சி சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி, குரூப் 1 முதல் குரூப் 4 நிலை வரையிலான அனைத்துத் தேர்வுகளும் உரிய காலத்தில் நடைபெறும். அடுத்த ஆண்டைப் பொறுத்தவரை, அரசு துறைகளின் தேவைக்கேற்ப, காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுகள் நடத்தப்படும்.
எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தேர்வு தொடர்பாக எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவர்கள், தேர்வுக்குத் தயாராகும் வேலையை வழக்கம்போல் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.