சென்னை:
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  திறந்து வைத்தார்.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வுகள் தொடங்கி நடைபெற்றது. ‘பிளாஸ்மா’ சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை யில் தொடங்கப்பட்ட நிலையில், 40க்கும் மேற்பட்டோர் குணமடைந்ததாக கூறப்பட்டது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அவர்களது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து, கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு செலுத்தி  சிகிச்சை அளிக்கப்படுவதையே பிளாஸ்மா சிகிச்சை என்று கூறப்படுகிறது

.ஏற்கனவே இதுபோன்ற சிகிச்சை  ‘மெர்ஸ், சார்ஸ்’ போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு அளித்த போது,  பிரமிக்கத்தக்க பலன் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே, அதுபோல சிகிச்சை அளிக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி சென்னை சென்னை ராஜிவ் காந்தி, மதுரை, நெல்லை, வேலுார் அரசு மருத்துவமனை களில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்மா சேகரித்து வைக்கும்  வகையில் பிளாஸ்மா வங்கி தொடங்கவும் மத்தியஅரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, அதற்ககான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரப்பட்டது. இந்த நிலையில்,  பிளாஸ்மா தானம் அளிக்க தமிழக முதல்வரும்  வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று மாலை தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே டெல்லியில் முதல் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே 2வது பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது.