சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடையே சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் திருவிடந்தைக்கு அருகில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த விளையாட்டு நகரத்திற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளவிருக்கிறது.

நீச்சல் வளாகம், சைக்கிள் பந்தய தடம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம், பல்நோக்கு உள்ளரங்கு மற்றும் கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்கான விளையாட்டரங்கு என்று பல்வேறு வசதிகளைக் கொண்ட ஒரு முழுமையான நகரமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்குமிடம், பணியாளர் குடியிருப்பு, உணவகங்கள், ஜிம் என்று சகல வசதிகளுடன் இந்த நகரத்தை அமைக்க தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் மூலம் நிபுணர் குழுவை ஒப்பந்தம் செய்ய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த நகரத்திற்கான அனைத்து ஒப்புதலும் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் அமையவிருக்கும் முதல் விளையாட்டு நகரமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சென்னைக்கு அருகில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு நகரம் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.