பெங்களூரு:

கர்நாடகா சென்ற அமித்ஷா , ராகுல் காந்தி விமானங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஹாவேரி மாவட்டம் காகினெலே என்ற இடத்தில் பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று தனி விமானத்தில் உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி விமான நிலையத்தில் வந்து நின்ற அந்த விமானத்தில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை  செய்தனர்.

அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனி விமானத்தில் உப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்தார்.  அவரது விமானம் தரையிறங்கியதும், தேர்தல் அதிகாரிகள்   சோதனை நடத்தினர்.

மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவினர், அந்த விமானத்தில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வாக்காளர்களை கவரும் வகையிலான பணமோ அல்லது வேறு ஏதாவது பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த அதிகாரிகள், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சோதனைகள் வழக்கமான ஒன்றுதான் என்று கூறினர்.