சென்னையில் கலங்கும் கட்டிடங்கள்… சிக்கலில் அதிகாரிகள்…

Must read

லஞ்சம் என்று வந்துவிட்டால் சென்னை மாநகராட்சியில் ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பது, கட்டுமானப் பணிகள் தொடர்பான விஷயங்கள்தான்.
ஒருபக்கம் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் எக்கச்சக்கமாக கறப்பார்கள்.

இன்னொரு பக்கம் லஞ்சம் கொடுத்து விட்டால் போதும், எப்படி வேண்டுமானாலும் விதிமுறைகளைமீறி கட்டிக்கொள்ளுங்கள் என்று வேடிக்கை பார்ப்பார்கள்.

காலம் காலமாக நடந்து வரும் இந்த அக்கிரமம் அண்மைக்காலமாக அதிகரித்ததில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மிரண்டு போய் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.

இதன் விளைவாக அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகள்.

விதிகளை மீறி 704 இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விதிமீறல்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காதவர்கள் என மூன்று உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொதுவாக விதிமீறல் கட்டட பணிகள் நடைபெறுகிறது என்றால், அங்கே நோட்டீஸ் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பிறகும் விதிமீறல் கட்டிட பணிகள் தொடர்ந்தால் அந்தப் பகுதியின் உதவி செயற்பொறியாளர் குற்ற உடந்தை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சூட்டோடு சூடாக, கட்டிட வரைபட பாடங்களுக்கு அனுமதி கொடுப்பதில் லஞ்சம் புழங்கும் விவகாரம் மீதும், சாட்டை தொடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் எந்தெந்த பகுதியில், கட்டிட வரைபடங்கள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டும் உரியவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது பற்றியும் மாநகராட்சி ஆணையர் நேரடியாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பது நோட்டீஸ் கொடுப்பது போன்றவற்றில் சென்னை மாநகராட்சியின் மணலி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம்,ஆலந்தூர்,பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய எட்டு மண்டலங்களில் மிக மோசமான நிலைஉள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கும் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– லதா வெங்கட்

More articles

Latest article