சேலம்:
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததால் மாற்று பாதை அமைக்கக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் போராட்டம் நடத்தினார். இவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் பியூஸ் மனுஷ்க்கு ஜாமின் கேட்டு அவரது மனைவி மோனிகா சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஷேசசாயி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது பியூஸ் மனுஷ் வழக்கறிஞர் ப.பா.மோகன், அரசு வழக்கறிஞர் தனசேகரின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது.
அப்போது, நீதிபதி, “பியூஸ் மனுஷ் போன்ற சமூக ஆர்வலர்களின் ஆதரவு நாட்டிற்கு தேவை. இதுபோன்ற பிரச்சனைகளில் தனி மனிதனாக போராடினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. சமூக அமைப்புகள், முற்றுகை போராட்டம், சாலை மறியல் போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படும்.
சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரதம், பேரணி போன்ற அறவழி போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகளை முறையாக தெரியப்படுத்த வேண்டும். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் நீதிமன்றங்களை நாடலாம். தனி மனிதனாக மறியல், ஆர்ப்பாட்டம் என்று போராடினால் கைது செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பியூஸ் மனுஷ்க்கு ஜாமின் வழங்கினால் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்படும். எனவே அவருக்கு ஜாமின் அளிக்கக் கூடாது என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை நாளை (புதன்கிழமை) க்கு ஒத்திவைத்தார்.
பியூஸ் மனுஷூக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக வந்த முந்தைய தகவல் தவறானது.