உலக வரலாற்றில் முதன்முறையாக மனிதருக்கு பன்றி இருதயம் பொருத்தி சாதனை! அமெரிக்க மருத்துவர்கள் அசத்தல்…

Must read

பால்டிமோர்: உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி அந்நாட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை செய்துள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில், மனிதருக்கு பன்றி சிறுநீரகம் பொருத்தி சாதனை செய்துள்ள நிலையில், தற்போது, பன்றி இருதயம் மனிதருக்கு பொருத்த அமெரிக்க மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை செய்துள்ளனர். பன்றி இருதயம் பொருத்தப்பட்ட நபர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இறுதி கட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட, 57 வயதான டேவிட் பென்னெட் என்ற மனிதருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக மாற்றி யுள்ளனர். இருதயம் மாற்றப்பட்ட நபர், மேரிலாந்தில் வசித்து வருபவர் என்றும், அவருக்கு கடந்த 8ந்தேதி வெற்றிகரமாக 7மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், இருதயம் மாற்றப்பட்ட நபர்  மூன்று நாட்களுக்குப் பிறகும் அவர் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பல ஆண்டு ஆராய்ச்சியின் உச்சத்தைக் குறிக்கிறது. மேலும், இது உலகம் முழுதும் பலரின் வாழ்க்கையை மாற்றலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக, இந்த அறுவை சிகிச்சை  செய்யாவிட்டால் பென்னெட் இறந்துவிடுவார் என கருதப்பட்டதால், இதனை மேற்கொள்ள மேரிலேண்ட் மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு, அமெரிக்க மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறப்பு பரிந்துரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து தெரிவித்துள்ள  மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழகம், இதுவொரு வரலாற்று அறுவை சிகிச்சை என்றும், “நோயாளிக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒரே வழி இதுவாகும்” என்று தெரிவித்துள்ளதுடன்,   “மரபணு மாற்றப்பட்ட விலங்குகளின் இதயம் உடலால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் மனித இதயத்தைப் போல செயல்பட முடியும் என்பதை இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதன்முறையாக நிரூபித்துள்ளது” என்று  தெரிவித்துள்ளது.

முன்னதாக பன்றியின் இருதயம் பொருத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்த டேவிட் பென்னெட்,  “இது வாழ்வா சாவா என்பதற்கிடையிலான அறுவை சிகிச்சை,” என கூறியதுடன்,  “இது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்ற போதிலும் என்னுடைய இறுதி வாய்ப்பு இது என்பதால், அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தேன் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடித்தி முடிந்த மருத்துவ நிபுணர்களில் ஒருவரான  பார்ட்லே பி. கிரிபித் கூறுகையில், “உறுப்பு பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு இந்த அறுவை சிகிச்சை உலகை ஒருபடி மேலே கொண்டு வரும் என்று நம்புவதாகவும், தற்போது,  அமெரிக்காவில் ஒருநாளுக்கு 17 பேர் அறுவை சிகிச்சைக்கு மாற்று உறுப்பு கிடைக்காமல் இறப்பதாகவும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்தவர், இதுபோன்ற நிலையை ஒழிக்கவும்,   தேவையைப் பூர்த்தி செய்ய செனோடிரான்ஸ்பிளன்டேஷன் (xenotransplantation) என்று அழைக்கப்படும், விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்டகாலமாக கருதப்படுகிறது, அதனால், அதை பயன்படுத்துவது பொதுவானதே, என்றவர், ஏற்கனவே  கடந்த அக்டோபர் 2021 அன்று, நியூயார்க்கில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், வெற்றிகரமாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்தியதாக அறிவித்தனர். அச்சமயத்தில், அந்த அறுவை சிகிச்சை மிகவும் முன்னோடியான பரிசோதனையாக கருதப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த நபர்  மூளைச்சாவு அடைந்தார். எனினும், இந்த அறுவை சிகிச்சை தன் வாழ்க்கையை தொடர அனுமதிக்கும் என தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட டேவிட் பென்னெட், அறுவைசிகிச்சைக்கு முன்பு ஆறு வாரங்களாக படுத்த படுக்கையாக இருந்தார், இதய நோய் கண்டறியப்பட்ட பின்னர் அவரை உயிருடன் வைத்திருப்பதற்கான கருவியுடன் அவர் இணைக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு, படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பன்றி, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் சர்க்கரையை உருவாக்கும் மரபணுவை சிறிது நேரம் உணர்விழக்கச் செய்யும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக பிரபல செய்தி நிறுவனமான  ஏ.எப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

More articles

Latest article