நாகர்கோவில்: கொரோனா நிவாரணம் ரூ.2000ஐ தனது பொக்கை வாய் சிரிப்புடன் பெற்று, பிரபலமான  குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 92.தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்த வேலம்மாள் பாட்டியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தின்போது, மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு இலவசமாக நிவாரண தொகை வழங்கியது. அந்த நேரத்தில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில்,  தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.2000 நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் போஸ் கொடுத்தவர்  90வயதான வேலம்மாள் பாட்டி.

இந்த பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பு புகைப்படம், ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமானது. இதையடுத்து, அவர் தனக்கு தங்க ஒரு இடம் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வந்தபோது வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது,   வேலம்மாள் பாட்டி, குடியிருக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது  கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் அவருக்கு வீடு ஒதுக்கி  அதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது.

தற்போது வேலம்மாள் பாட்டிக்கு 92 வயதான நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  அவரது மறைவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என தனது மனக்குமுறலை பாட்டி வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாரிகள் உடடினயாக ஆய்வு செய்து, அவருக்கு வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை வழங்கினர்.

வேலம்மாள் பாட்டி மறைவு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…