நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் அவருக்கு வீடு ஒதுக்கி உள்ளார். அதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது.

தனக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என தனது மனக்குமுறலை பாட்டி வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாரிகள் உடடினயாக ஆய்வு செய்து, அவருக்கு வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை வழங்கினர்.

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தின்போது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகஅரசு நிவாரண உதவி வழங்கியது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்றப்பட்டதும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது. தொடர்ந்து, நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 2 தவணைகளாக ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது, அரசு  வழங்கிய ரூ.2000 நிவாரணத் தொகை பெற்ற சந்தோஷசத்தில், தனது பொக்கை வாய்சிரிப்புடன் போஸ் கொடுத்து பிரபலமானவர் வேலம்மாள் பாட்டி.  அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேலம்மாள் என்ற பாட்டி சிரித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. 91 வயதாகும் இந்த பாட்டி,  குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து இருக்கும் கீழகலுங்கடிப்பகுதியை சேர்ந்தவர்.

பின்னர் 2022 மார்ச் மாதம்  முதல்வர் குமரி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த பாட்டி குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து  வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது வேலம்மாள் பாட்டி முதியோர் உதவித் தொகை கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது அதை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தவர்,  தனக்கு வீடு வழங்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

இந்த நிலையில், தனக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை என்று வேலம்மாள் பாட்டி பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. வேலம்மாள் பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பு  புகைப்படத்தை எடுத்து பிரபலமான  புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, வேலம்மாள் பாட்டி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில், வேலம்மாள் பாட்டி, “முதலமைச்சர் ஐயா! நீங்க வீடு தாங்க என்று சொன்னேன். கலெக்டரை பார்க்க சென்றேன். அவரும் தருவதாக சொன்னார். இதுவரை தரவில்லை. தெருவில் நிக்கிறேன் ஐயா!” என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்தவீடியோ வைரலானது.

இதையடுத்து அதுகுறித்து அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது, வேலம்மாள் பாட்டி வசித்த வரும்  வாடகை வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக வும், அதை மாவட்ட நிர்வாகம் இடிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்கள். இதனால் பாட்டி தங்குவதற்கே இடம் இல்லாத சூழலில், தமிழகஅரசுக்கு நினைவூட்டும் வகையில், வீடியோவில் பேசியதாக கூறப்பட்டது.

இது முதலமைச்சரின் காதுக்கு எட்டியது. இதையடுத்து, அதிகாரிகள் விழுந்தடித்துக்கொண்டு ஆய்வு செய்தனர். ஆர்டிஒ வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து பேசினார். அவரது கோரிக்கை ஏற்படுவதாக கூறினார். இதையடுத்து, தற்போது, வேலம்மாள் பாட்டிக்கு வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை பாட்டியிடம் அதிகாரிகள் வழங்கினார்.

‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு