சென்னை:
வேளச்சேரியில் அமைந்துள்ள சென்னையின் பிரமாண்டமான பீனிக்ஸ் பொழுதுபோக்கு மாலில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பொழுதுபோக்குக்கான இடம் பீனிக்ஸ் மால். இங்கு ஏராளமான கடைகள் மற்றும் தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். சென்னைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொழுதுபோக்குவது வழக்கம்.
தற்போது, கொரோனா வைரஸ் இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், இந்த மாலில் உள்ள லைஃப் ஸ்டைல் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது உறுதியாகி உள்ளது.
நேற்று அங்கு பணியாற்றிய ஒரு விற்பனை பிரதிநிதியான பெண் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 2 பெருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
இது செய்தி சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து தோல் பொருட்கள் விற்பனை செய்யும் லைஃப் ஸ்டைல் கடையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் மார்ச் 10 முதல் 17ம் தேதிக்குள் அந்தக்கடைக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்கள் வசித்த இடங்கள், பணியாற்றிய இடங்களை கண்டறிந்து அங்குள்ளவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவிப்பும் வெளியிட்டு உளளது.
இதற்கிடையில், டெல்லி நிஜாமுகிதின் தப்லிகி ஜமாத் (Nizamuddin Tablighi Jamaat) கூட்டத்தில் பங்கேற்ற, தமிழகத் தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 110 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
இன்றைய மாலை நிலவரப்படி (02-04-2020) தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயந்துள்ளது.
இதுகுறித்து கூறிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீனா ராஜேஷ், பீனிக்ஸ் மாலில் பணிபுரியும் இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவருக்கு கேரள நபர் ஒருவரிடம் இருந்து தொற்று பரவி உள்ளது தெரிய வந்துள்ளதுஎன்றும், அந்த கேரள நபர் சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்தவர் என்றும் தெரிவித்து உள்ளார்.