சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) 3 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால், தொகுதி பங்கீட்டில் முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தனது கூட்டணிகட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 2வது கட்ட பேச்சுவார்த்தை நடெபற்று வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும்  காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, முஸ்லீம் லீக், மமக, தவாக  உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் திமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

ஏற்கனவ கொமதேக (நாமக்கல்)  மற்றும் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம்)  கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகீறது.

இந்த நிலையில்,  திமுக  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன்  இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில்,  நாகை, திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளை  கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ எம்.பி சுப்பராயன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்பதை கிராமம் மற்றும் நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போது இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமாக நடைபெற்றது. ஆனால், இப்போது அதுகுறித்து பகிர்ந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும்,  மார்ச் 3ம் தேதிக்கு பிறகு தொகுதிப் பங்கீடு நிறைவு பெறும் என்று விவரித்த சுப்பராயன், “முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது நாங்கள் எந்த தொகுதிகள் வேண்டும் என்ற லிஸ்ட் கொடுத்தோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தி அளித்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு மார்ச் 3ஆம் தேதிக்கு மேல் அழைப்பார்கள். ஏற்கனவே வெற்றிபெற்ற இரண்டு தொகுதிகளோடு இன்னும் ஒரு தொகுதி கூடுதலாக கேட்டுள்ளோம். இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்

நடைபெறும் தேர்தல் மக்களவைக்குதான்.. மாநிலங்களவைக்கு அல்ல. ஆகவே, மாநிலங்களவை சீட் தொடர்பாக எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை” என்றும் விளக்கம் அளித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நாகை தொகுதியில் எம்.செல்வராஜ், திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் என இருவரும் வெற்றிபெற்றனர். மேலும், சிபிஐ கேட்கும் தென்காசியில் ஏற்கனவே 2004, 2009 தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.