பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம், திருச்சி – கரூர் வழித்தடத்தில், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 51 கி.மீ தொலைவிலும் பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
நம் நாட்டின் திருக்கோவில்கள் தவ வலிமை வாய்ந்த ஒப்பற்ற மாபெரும் சான்றோர்களால் நிறுவப்பெற்று இம்மையில் அறம், பொருள், இன்பத்தையும் மறுமையில் வீடு பேற்றையும் அருளும் தெய்வத் திருத்தலங்கள் ஆகும்.
இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடும் அன்பர்களது குறைகளைக் களைவதுடன், அவர்களது பிறவிப் பிணியையும் போக்கும் இறையின் வல்லமை நமது அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஒரு மருத்துவருக்கே விளங்காத, மருத்துவ சக்திக்கு மீறிய எத்தனையோ அற்புதங்கள் மருத்துவ வரலாற்றில் நடப்பதுண்டு. நமக்கும் மேலான மருத்துவராய் நின்று, நம்மை எல்லாம் காப்பது, அந்த இறையும் இயற்கையுமன்றி வேறு யார்? இப்படி, அடியார்தம் உயிர்காக்கும் மருத்துவனாய், அவர்களது வாழ்வை வளமாக்கும் வள்ளலாய் இறைவன் அருளும் தலங்களில், முக்கியமான சில தலங்களை நாம் இந்தத் தொடரில் தரிசிப்போம்.
உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலம் ஒரு துளி சுக்கிலம். அதிலும் ஒரு சிறு துளியைத் தன்னுள் ஏற்று, கருவாக்கிக்காத்து, உயிர்களை ஜனிக்கவைக்கும் பெருமையும் பேறும் கொண்டது கருப்பை.
சும்மாவா சொன்னார்கள் ‘கர்ப்ப கிரகம்’ என்று? கர்ப்பத்தைத் தாங்கும் அந்தக் கிரகமே ஒரு கோவில்தானே! அந்தப் புனிதமான கருப்பைக்கு வரும் இயற்கைப் பிரச்னைகளும், கோளாறுகளும், வியாதிகளும் எத்தனை, எத்தனை? அவற்றை எல்லாம் தீர்த்துவைக்கும் ஒரே திருத்தலம், திருச்சிக்கு அருகே இருக்கும் பேட்டவாய்த்தலை.
தமிழகத்தின் பாடல்பெற்ற சிவத்தலங்களில் பெரும்பாலும் அய்யனே பிணி தீர்க்கும் பெரு மருத்துவராக விளங்க; சிற்சில கோவில்களில் அந்தப் பணியை ஏற்று, பிணியைத் தீர்க்கிறாள் அம்பிகை.
பேட்டவாய்த்தலை-ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வர சுவாமி திருக்கோவிலிலும், அன்னை பாலாம்பிகையே பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு அபயம் அளித்து, குணமாக்குகிறாள்.