சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக  இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு வாடகை 30 சதவீதம் உயர்த்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்

நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்களின் விலை வரலாறு காணாதக அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் விலைவாசிகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் வாடகையை 30 சதவிகிதம் உயர்த்துவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து,  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மாநில தலைவர் முருகன் வெங்டாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  டீசல் விலை இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அரசின் பழைய வாகன அழிப்பு கொள்கையால் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் வாகனங்களும், இதனை சார்ந்த 20 லட்சம் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எங்களின் பல கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தி்ன் பொதுக்குழு கூட்டம் மார்ச் 3-ந் தேதி நடத்த இருக்கிறோம்.

இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இருக்கிறோம். மார்ச் 3-ந் தேதி முதல் இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்திற்கும் 30 சதவீதம் வாடகையை உயர்த்த இருக்கிறோம். மேலும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.