சென்னை,
1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்கள் இரவு முதல் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளதால் 100, 50 ரூபாய் நோட்டுக்களுக்கு தேவை அதிகரித்து பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் அறிவிப்பு காரணமாக, சென்னையில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது.
ஏடிஎம் இ-சென்டர்களில் 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கூட்டம் ஒருபுறம், ஏடிஎம் மெஷினில் பணம் எடுப்பதைற்கு ஒரு கூட்டம் என ஆங்காங்கே உள்ள ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலை மோதியது.
100rs
மணிக்கணக்கில் காத்திருந்து ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்து வருகின்றனர். கையில் இருக்கும் 500,1000 ரூபாய் நோட்டுக்களை ஏராளமானோர் டெபாசிட் செய்து வருகின்றனர். நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் இரு தினங்களுக்கு ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் வங்கி நாளை ஒருநாள் விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியானதால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே கையிருப்பில் உள்ள 500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற படாத பாடு பட்டு வருகின்றனர்.
பெட்ரோல் பங்குகளில் 500, 1000 ரூபாய்களுக்கு மட்டுமே பெட்ரோல் போடப்படுகின்றன.
உணவகங்களில் சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் கொடுப்பவர்களிடம் வாங்க மறுப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் தீர்ந்து விட்டன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
பெட்ரோல் பங்க்குகளில் 2 நாட்கள் கொடுக்கலாம் என்று அறிவித்தும் பல இடங்களில் வாங்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிலரோ தங்களின் கைகளில் இருக்கு சில 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை அவசர தேவைக்காக பெட்ரோல் பங்குகளில் கொடுத்து மாற்றிச் சென்றனர்.
அதிலும் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் கமிஷன் எடுத்துக்கொண்டே பணம் கொடுத்தனர். சில இடங்களில் பணத்துக்கு தகுந்தவாறு 10 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை கமிஷன் கேட்பதாகவும் தகவல்கள் வந்தன.
நேற்று வரை 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை பர்ஸ்களில் வைத்துக்கொண்டு கெத்து காட்டியவர்கள், இன்று அது செல்லாகாசாகி,  வெறும் பேப்பராக மாறியது பெரும்பாலானவர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மோடியின் ஒரே ஒரு அதிரடி அறிவிப்பால் இந்தியாவே மிரண்டுபோய் உள்ளதாக கூறப்படுகிறது.