சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் சிறைக்காலம் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக அவர் 2021ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை தெரிவித்தது. மேலும், அவருக்கு நீதிமன்றம் விதித்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு காலம் சிறையில் இருக்க நேரிடும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்தவாரம் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடியை, அவரது உறவினர்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கட்டினர். இதனால், சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சிறை நன்னடத்தை விதிகள்படி சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என கர்நாடக சிறைத்துறையிடம் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது,
சிறையில் உள்ள சசிகலாவின் சிறைவாசம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. கர்நாடக சிறைத்துறை கூறியபடி, அவர் இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. ஆனால், சிறை நன்னடத்தை விதிகளின் கீழ் அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம். அவருக்கு சிறை விதிகளின்படி, 129 நாட்கள் சலுகை உள்ளது. இதை சுட்டிக்காட்டியும், உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்பட பல்வேறு ஆதாரங்களுடன் சிறை நிர்வாகத்திடம், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தங்களது மனுவை பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.