சென்னை: சென்னையில் பிரபலமான வடபழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்த விழாக்களில் கந்தசஷ்டி சிறப்பு வாய்ந்தது. இவ்விழா கடந்த 15ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 20ந்தேதி) நடைபெறுகிறது.ஆனால்,  இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல கோவில்களில் சூரசம்ஹாரம் விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. சூரசம்ஹாரத்துக்கு பெயர்போன திருச்செந்தூரில், பக்தர்கள் இன்றி கடற்கரையில் விழா நடைபெறும் என்றும், அது நேரலை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலிலும் இந்த ஆண்டு  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னரே திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.