சென்னை
சாலைகளில் வசிப்போருக்கு கொரோனா பரிசோதனை நடத்தத் தனிக்குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 2162 பேர் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிர் இழந்துள்ளனர். இதையொட்டி நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி கொரோனா அறிகுறிகள் உள்ளோருக்குப் பரிசோதனை செய்து வருகின்றனர். ஆனால் இந்த கணக்கெடுப்பில் சாலைகளில் வசிப்போர் இடம் பெறுவதில்லை.
இதையொட்டி திருச்சியை சேர்ண்ட வழக்கறிஞரான அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆயினும் வசிக்க வீடுகள் இன்று சாலைகளில் வசித்து வரும் பல ஆதரவற்ற மக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.
கொரோனா தொற்று இவர்கள் மூலமாக வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஒரு தனிக்குழு அமைத்து சாலைகளில் வசிப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் மூலம் கொரோனா பரவுதை தடுக்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் 41 அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்ப்டுகின்றன். இது போதுமானதாக இல்லாததால் இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் அங்கீகாரம் பெற்ற “BSL-3 VRDL Lab” என்னும் பரிசோதனை மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.500 ஆகக் குறைக்க உத்தரவிடவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.