டெல்லி:

திமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா திருச்சி சிவா எம்.பி.யுடன்  இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.  தனது  படங்களை  சமூக வலைதளங்களில் இருந்து  நீக்க உத்தரவிடக் கோரி சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். திமுக எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருங்கி பழகியது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர், ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இருப்பவரும்,  நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ள ராமசாமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 26ந்தேதி டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் எளிமையாக நடைப்றறது.

இதையடுத்து,  சசிகலா தரப்பில்,  டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தன்னை மற்றொரு நபருடன் இருப்பது போல அவதூறாகவும், தவறாக சித்தரித்தும் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்க பேஸ்புக், கூகுள், யு ட்யூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீவ் சாஹாய் விசாரித்த வந்தார். பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், பரபரப்பு தீர்ப்பு அளித்தார். 43 பக்க அளவிலான அந்த தீர்ப்பில் பல்வேறு நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதில்,

“இந்த வழக்கில் மனுதாரரின் அந்தரங்க உரிமையும், அவர் யாரை சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உள்ள உரிமையையும் சமன்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது.

மனுதாரர் சசிகலா புஷ்பா ஒரு அரசியல்வாதி, தேர்தல் களத்தில் பங்கேற்றுள்ள ஒரு மக்கள் பிரதிநிதி.

இந்த உண்மையை கருத்தில் கொண்டு, மூடிய கதவுகளுக்கு பின்னால் அவரை யார் சந்திக்கிறார் என்பதை அறிய மக்கள் அல்லது வாக்காளர்களுக்கு நிச்சயமாக உரிமை உண்டு”

வழக்கில், “சசிகலா புஷ்பா தரப்பு வாதத்தின் போது, எதிர்கட்சி நபருடனான அந்த சந்திப்புகள் பொதுநலனுக்கான சந்திப்பு என்பதை எடுத்து வைக்கவும் இல்லை, சந்திப்புகளை மறைத்திட வேண்டும் எனவும் வாதிடவில்லை” என்று சுட்டிக்காட்டிய நீதிபதி,

இது தொடர்பான புகைப்படங்களை நீக்கவோ, அவற்றை பார்ப்பதிலிருந்து கட்டுப்பாடு விதிக்கவோ பேஸ்புக், கூகுள், யு டியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது என்று சசிகலா புஷ்பாவின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்தார்.