டில்லி

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் விதி எண் 35ஏ ஆகியவை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அத்துடன் சிறப்பு அந்தஸ்தை இழந்த காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் என  இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி ஆட்சியில் உள்ளது.

தற்போது காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்தை இழந்துள்ளதால் இனி  அனைத்து இந்தியச் சட்டங்களும் காஷ்மீர் பகுதிகளுக்கும் செல்லும். இதற்கு காஷ்மீர் அரசின் அனுமதி தேவை என்பது விதிமுறை ஆகும். தற்போது மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதால் அரசின் இந்த முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் பொதுமானதாகும். ஆனால் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிரபல வழக்கறிஞரும் காஷ்மீர் அரசியலமைப்பு சட்ட  ஆர்வலருமான அமன் ஹிங்க்ரோணி, “மாநில ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர் ஆவார். எனவே குடியரசுத்தலைவருக்கு அவரே ஒப்புதல் அளிப்பது செல்லாத ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் எம் எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனு அளித்துள்ளார்.