மன்னார்குடி: பெரியார் ஒரு உலகத் தலைவர் என்றும், அவர் தமிழ்நாட்டில் பிறந்த காரணத்தினாலேயே சுருக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் வேறு முக்கிய இடங்களில் பிறந்திருந்தால் பெரியார் ஒரு உலகத் தலைவராக கொண்டாடப்பட்டிருப்பார் என்றும் கூறியுள்ளார் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசினார் தமிமுன் அன்சாரி.
அவர் பேசியதாவது, “தமக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கையில்லை என்றாலும்கூட, அதை மதிப்பவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென கூறியவர் பெரியார். இன்று பெரியாரின் சிலைகளை உடைக்கிறார்கள். சிலைகளை மட்டுமல்ல, அவரின் கொள்கைகளையும் உடைக்க முயல்கிறார்கள்.
பெரியார் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் பிறந்திருந்தால் அவர் உலகத் தலைவராக போற்றப்பட்டிருப்பார். டெல்லியில் பிறந்திருந்தால்கூட அவர் தேசிய தலைவராக மதிக்கப்பட்டிருப்பார். தமிழகத்தில் பிறந்துவிட்டதால் அவர் குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கப்பட்டுவிட்டார்.
பெரியாரின் நூல்களை அனைத்து நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாரின் தத்துவங்களை அனைத்துநாட்டு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
பெரியார் ஒரு அரசியல்வாதியல்ல; அவர் ஒரு சமூகசீர்திருத்தவாதி” என்று பேசினார் தமிமுன் அன்சாரி. அவர் நாகை மாவட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவராகவும் உள்ளார்.