பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள், பேரறிவாளன் ஆனந்த கண்ணீர் – அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

Must read

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மகனின் விடுதலைக்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வந்த பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், தந்தையார் குயில் தாசன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் ஆனந்த கண்ணீர் விடுத்ததுடன், தங்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களான தொல்.திருமாவளவன், வைகோ, கி-வீரமணி, டிடிவி தினகரன், அண்ணாமலை, தோழர் தியாகு, இயக்குனர் பாரதிராஜா உள்பட பலர் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. பேரறிவாளனின் விடுதலைக்கு போராடிய அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.

பேரறிவாளன்: எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது என விடுதலை குறித்து பேரறிவாளன் தெரிவித்துள்ளார். எனது குடும்பம் உறவுகளின் பாசம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அரசு, மக்களின் ஆதரவு பெருகுவதற்கு செங்கொடியின் தியாகம் தான் காரணம் எனவும் கூறினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன் என்றார்.

பேரறிவாளன் தந்தை குயில்தாசன்: பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த மனிதநேயமுள்ள அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.

திருமாவளவன்: ஒரு தாயின் அறப்போர் வென்றது; அற்புதம் அம்மாளின் நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. நீதிபதிகளின் நேர்மைக்கு பாராட்டுகள். பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? எனவும் கேள்வி எழுப்பினார்.

டிடிவி தினகரன்: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. ‘தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் கூறினார்.

வைகோ: பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாமல் இந்த இளைஞருடைய இளமைக்கால வாழ்க்கையை சீர்குலைக்கப்பட்டுவிட்டது என வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறியுளளார்.

ராமதாஸ்: இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கில் ஒருவருக்கு முழுமையான நீதி வழங்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. பேரறிவாளனின் விடுதலைக்கு சிறையில் இருந்தபடியே அவர் நடத்தி வந்த நீண்ட நெடிய சட்டப் போராட்டம் தான் முதன்மைக் காரணம் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள்  பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். தனது பாதி காலத்தை  சிறையிலேயே அவர் அனுபவித்து விட்ட நிலையில் பேரறிவாளனின் விடுதலை அவரது தாயார் அற்புதம்மாளின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அற்புதம்மாளின் விடா முயற்சியால் இன்று  தனது மகனை மீட்டெடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், “ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கீ.வீரமணி: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேரறிவாளனை விடுதலை உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு. இன்று வெளிவந்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றில் மிகவும் சிறப்புடன் என்றென்றும் பாராட்டப்படும் முக்கியத் தீர்ப்பு. மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத ஓர் அருமையான நல்ல தீர்ப்பு. அரசமைப்புச் சட்ட அமைப்பின் மீது வெகுமக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் பெருத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனிதநேயம் பொங்கும் தீர்ப்பு இது. ஆளுநர்கள் அவர்களை இயக்கும் அதிகார வர்க்கம் அரசமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாக செயல்படவேண்டும் என்ற பாடத்தை, அதை மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திடும் அருமையான அரசமைப்புச் சட்டத்திற்கான விளக்கத்தைத் தந்துள்ள தீர்ப்பு இது.

இதில் இறுதிவரை உறுதியாக இருந்த தமிழ்நாடு அரசும், குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் பாராட்டு மட்டுமல்ல இத்தீர்ப்பு; அரசமைப்புச் சட்டம் யாரால் சரியாகப் பின்பற்றப்படுகிறது? காப்பாற்றப்படுகிறது? என்ற பேருண்மையை அகில உலகிற்கும் அறிவிக்கும் தீர்ப்பும் ஆகும். இதற்காக பாடுபட்ட வழக்குரைஞர்கள், கட்சித் தலைவர்கள், நியாயத்தின்பாற் நின்ற மனித உரிமைப் போராளிகள் அனைவருக்கும் நமது நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற அமர்வு நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு நமது பாராட்டுகள். பேரறிவாளனின் வெற்றி, நியாயத்தின், நேர்மையின் வெற்றி. எதிர்பார்க்கப்பட்ட இந்த நல்ல தீர்ப்பைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல; நியாயம், நீதி வெற்றி பெற்றதுகண்டு நல்லுள்ளங்கள் பெருமகிழ்ச்சிக்கு அளவில்லை. மகிழ்கிறோம் – வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாமலை: பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தியாகு: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கண்டனத்துக்கு மதிப்பளித்து ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவி விலக வேண்டும் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் பதவி விலகினால் தான் பேரறிவாளனுக்கு கிடைத்த நீதி முழுமை பெறும் எனவும் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா: தம்பி பேரறிவாளன் விடுதலை மிகப்பெரும் மகிழ்ச்சி என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 உறவுகளையும் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்: ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More articles

Latest article