சென்னை:

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர், பேரறிவாளன் பரோல் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் மேல் சிகிச்சைக்காக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் சட்டமன்றத்தில், காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என சட்டசபையில் திமுக அண்மையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

மேலும், பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கை இதுவரை ஏன் தரவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.