சென்னை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.  அதையொட்டி நடந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 6 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.   ஆனால் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.  பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவருக்கு மருத்துவச் சிகிச்சை பெற விடுமுறை வேண்டும் எனவும் அவர் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று தற்போது புழல் சிறையிலிருந்து வரும் ஏஜி பேரறிவாளன் அவர்களுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க  அவரது தாயார் டி அற்புதம்மாள் அவர்கள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை அடிப்படையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.