சென்னை:  பண்டிகை நாட்களில் வெங்காயத்தின் விலை உயர்ந்திருந்தது,  பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது கிலோ வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு வெங்காயம் வந்துகொண்டிருந்தது.  ஆனால் பல மாநிலங்களில் பெய்து வந்த தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிருந்து வரும் வெங்காயத்தின்  வரத்து குறைந்த நிலையில், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இதன் கடந்த ஒரு மாதமாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.100ஐ தாண்டியும், சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து வியாபாரிகள் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்துள்ளது.  தற்போது எகிப்து வெங்காயம்  கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும்,  தமிழகஅரசும், மக்கள் நலனை கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்தது. இதனால் பொதுமக்கள் சற்றே இளைபாறினர்.

இநத் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரிதுது உள்ளது. ஆந்திராவில் இருந்து பல டன் வெங்காயம் வந்து குவிந்துள்ளதால், விலையும் கணிமாக குறைந்து உள்ளது.  கிலோ ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை  தற்போது,  கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல,  கோவை மாவட்டம் மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய விளைச்சல் சிறப்பாக உள்ளதாலும் அங்கு விளையும் வெங்காயம் அதே பகுதிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதால் கோவை சந்தையில் வெங்காயத்தின் விலை மற்ற நகரங்களைவிட சற்று குறைவாக உள்ளது.

அங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 66 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 76 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.