கொல்லம்,
கேரள மாநிலம், கொல்லத்தில், செல்லாத ரூபாயை நோட்டுக்களை மாற்ற வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரண்ட வங்கி அதிகாரிகள் கதவைப் பூட்டியதால், ஆத்திரமடைந்த மக்கள், கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
கடந்த 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என மோடி திடீரென அறிவித்தார். இதையடுத்து சில்லரைக்காக மக்கள் நாயாய் அலைகின்றனர். ஒவ்வொரு வங்கி வாசலிலும் கடந்த 3 நாட்களாக மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
ஆனால் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கிலே இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தங்களிடம் இருக்கும் செல்லாத பணத்தை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஒருவர் ரூ. 4 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும் என கட்டுப்பாடும் விதித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ஏ.டி.எம். மையங்கள், வங்கிகள், தபால் அலுவலகங்கள் முன் மக்கள் வரிசை கட்டி காத்தி நின்று, பணத்தை வாங்கி சென்று வருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் இன்னும் சரியாக செயல்படவில்லை. ஏராளமான ஏடிஎம்கள் நெட்வொர்க் பிராப்ளம் என் முடங்கி விட்டன. இதனால் மக்கள் பணத்துக்காக அல்லாடி வருகின்றனர்.
வங்கி கணக்கில் பணம் இருந்தும், மக்கள் செலவுக்கு காசு இல்லாமல், சாலையில் நீண்ட வரிசையில் வங்கியின் முன் பணத்துக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.
நேற்று கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி திருவாங்கூர் கிளை முன் நேற்று காலை முதலே ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.
காலை 9.30 மணிக்கு வங்கி கதவு திறக்கப்பட்டதும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் திபுதிபுவென வங்கிக்குள் நுழைந்தனர்.
இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மக்களை வங்கியை விட்டு வெளியேற உத்தரவிட்டனர். ஆனால், வங்கிக்கு வெளியிலும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதைப் பார்த்து மிரண்டனர்.
இதனால், செய்வதறியாது, வங்கிக்குள் மேலும் யாரும் நுழையாதவாறு கதவை உள்பக்கம் பூட்டினர்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள், வங்கி அதிகாரிகள் செயல்பாட்டை கண்டு கோபமுற்றனர். இதனால், ரகளையில் ஈடுபட்டு வங்கியின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரகளையில் ஈடுபட்ட பொது மக்களை அமைதிப்படுத்தினர்.
இதுவரை கேரளாவில், வங்கியில் பணம் பெற வரிசையில் நின்ற 2 பேர் நேற்று உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.